சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பில் கூடுதல் செயலாளராக அருணா பணியாற்றி வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு இவரை அதே கிளப்பில் வேலை பார்த்து வந்த முன்னாள் பாதுகாவலர் சோலமலை என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்
கடந்த 2012ஆம் ஆண்டு ரேஸ் கிளப் வாளகத்தில் அண்ணாநகரைச் சேர்ந்த பைனான்சியர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சோலமலை உள்ளிட்ட ஊழியர்களை அருணா பணிநீக்கம் செய்தததாகவும் அதற்கு பழிவாங்கும் நோக்கில் அருணா கொலை செய்யப்பட்டதாகவும் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், சோலமலைக்கு சென்னை மகிளா நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சோலமலை மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகள் 12 பேரும், நிர்வாகத்திற்கு சாதகமாக சாட்சி சொல்லியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் கொலை செய்யப்பட்ட அருணாவின் உடலில் 21 வெட்டு காயங்கள் இருந்ததாகவும், ஒருவரால் இதை ஏற்படுத்த முடியாது, ஒன்றுக்கும் மேற்பட்ட கத்திகள் பயன்படுத்தியிருக்க வேண்டும், என்று மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், சம்பவ நடந்தது இரவு நேரம் என்பதால் சாட்சிகளால் சரிவர சாட்சியம் சொல்ல முடியவில்லை என்றும், காவல்துறையில் புகார் கொடுத்த நேரத்தில் குளறுபடிகள் உள்ளது என்று வாதிட்டார். நடந்த சம்பவம் கொலை தான் என்றாலும் இவர்தான் செய்தார் என்று காவல்துறை சரிவுர புலன் விசாரணை நடத்தவில்லை எனவும் வாதிட்டார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொலைக்கான உள்நோக்கம் நிரூபிக்கப்பட்டள்ளது, கீழ் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு அப்பால் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதாலேயே தண்டனை வழங்கப்பட்டதாகவும், எனவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் அரசு தரப்பு தனது வழக்கை நிரூபிக்க தவறிவிட்டது என்றும், அத்தகைய சூழ்நிலையில் குற்றாவளி என தீர்ப்பளிப்பது பாதுகாப்பனது அல்ல என்றும்,மேல்முறையீடு செய்பவருக்கு சந்தேகத்தின் பலனை பெற உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் உரிய ஆதாரம் இல்லாததால் உண்மை வெற்றி பெற தவறிவிட்டது என்று கூறி மகிளா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து மனுதாரரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாடு.. துணைவேந்தர் எஸ்.கௌரி மறுப்பு