திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடியில் டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலை கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு U.G., P.G., மற்றும் Ph.D. உள்ளிட்ட பல்வேறு பாடபிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களை வழங்கினார்.
அத்துடன், அனைத்து துறைகளிலும் முதல் இடங்களை பிடித்த முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரி மாணவர்களுக்கு பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.
கரோனா - உலகிற்கு உதவிய இந்தியா
நிகழ்ச்சியில் பேசிய அவர், "2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டும். தடுப்பூசி, பிபிஇ கிட் நாம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் தற்சார்பு இந்தியா திட்டத்தை கொண்டிருந்தது.
அதன்மூலம் தொற்றை தடுக்க வேண்டிய தடுப்பூசி, பிபிஇ கிட் ஆகியவற்றை தயாரித்து நம் தேவைக்கு போக பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம்.
மோடிக்கு நன்றி
பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பும், உயிரிழப்பும் வெகுவாக குறைக்கப்பட்டது. காஷ்மீர், அருணாசல பிரதேசம், லட்ச்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதற்கு உதவிய சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வருங்கால இந்தியாவை உருவாக்கும் வகையில் மாணவர்கள் உருவாக வேண்டும்.
இளைஞர்கள் சாதிக்கலாம்
பிட் இந்தியா, கேலோ இந்தியா ஆகியவை இளைஞர்களின் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கூட ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் ஆகியவற்றில் கால் தடம் பதித்தனர் என்றார். தேசிய பாதுகாப்பு அகாடமி, துணை ராணுவம் ஆகியவற்றில் மகளிர் இணைவதற்கான வாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது என்றார்.
புதிய கல்விக் கொள்கை யாருக்கும் எதிரானது அல்ல. மொழியை யார் மீதும் திணிக்கக் கூடாது என்பதை போலவே, விருப்பம் உள்ளவர்கள் கூடுதலான மொழியை படிக்கலாம் என்பதும் என் எண்ணம் என்றார்.
இளைஞர் முன்வர வேண்டும்
கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாம் கூற்றின் படி, வருங்கால இந்தியாவை படைக்கும் இளைஞர்கள் உருவாக வேண்டும். இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் ஆக இல்லாமல், வேலை அளிப்பவராக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தற்போது 75 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம்.
100 வது சுதந்திர தினமான 2047 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாக்கும் வகையில் இளைஞர்கள் உழைக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் தற்போது மக்களை நேரடியாக சென்றடைகிறது.
நேர்மையான ஆட்சி தரும் பிரதமரின் கரங்களை வலுப்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும், புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வாருங்கள் என்றும் கல்வியே சிறந்த செல்வம், கல்வி செல்வத்தை அனைவரும் பெற்றிருக்க வேண்டும். அந்த அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன்" என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'Ex Minister Rajendra Balaji வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவாரு!'