சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முதல் மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை வரை பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், நடிகை ரோகினி உள்ளிட்டோருடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
நடிகை ரோகினி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "பாலின சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான நடை இது. எங்களது தோழர்கள் இருந்ததால் இரவில் நடக்கிறோம். இதுவே நாங்கள் தனியாக வர முடியுமா என்று தெரியவில்லை.
இன்னும் அது போன்ற சூழல் இல்லை. தனியாக நாங்கள் வரக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதற்காக தான் இந்த நடை பயணம் ஏற்பாடு செய்திருக்கிறோம். பாலின சமத்துவத்தை பற்றி பேசிக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் இன்னும் அதை நாம் எட்டவில்லை. அதை எட்டுவதற்கான நடை தான் இது" என கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்,
"பெண் விடுதலைக்காக போராடிய பெரியார் சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை வரை நடந்து வந்துள்ளோம். பெண் விடுதலைக்காக உறுதிமொழி ஏற்க இருக்கிறோம். பகலும் நமக்காக, இரவும் நமக்காக, நாடும் நமக்காக, நாட்டு வளங்களும் நமக்காக என்று ஆண் பெண் பாலின வேறுபாடு இல்லாமல் இருப்பதற்காக இரவு நேர நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
இரவு நேரங்களில் பெண்கள் வெளியே போகக்கூடாது என்று இந்த உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இரவு வேளையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர். இதுவே பெண் விடுதலைக்கான ஒரு சாட்சியாக அமைகிறது என சுட்டிக்காட்டுகிறேன். ஆண்கள் மனைவியை மனைவி என்று சொல்லக்கூடாது, இணையர் என்று சொல்ல வேண்டும். இந்த இரவு வேளையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.
பாலின சமத்துவதற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து போராட வேண்டும். இதில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவரை சேர்ந்த அனைவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனதார பாராட்டுகிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமருடன் 7,500 பெண்கள் ஒன்றாக ராட்டை சுற்றி சாதனை