முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில், அரசு சார்பில் 79 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வரும் 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் விவாதங்களுக்கும் பஞ்சமின்றி நாட்கள் நகர்கின்றன. சில நாட்கள் முன்பு வரை அரசியல் களத்தை ஆக்கிரமித்திருந்த ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் தற்போது தான் ஓய்ந்திருக்கின்றன. அடுத்ததாக சசிகலாவின் வருகை பெரும் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்குள் அதிமுக-அமமுக இணைப்பு என பலவகையிலும் யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
அதற்கு அச்சாரம் போட்டது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும்தான். இவர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு சசிகலாவிற்கு ஆதரவாக சில கருத்துகளை ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். அது அதிமுகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தியும், திமுகவை வீழ்த்த அதிமுக சசிகலாவுடன் இணையலாம் எனக் கூறியிருந்தார்.
அதோடு, அண்மைக்காலமாக டி.டி.வி.தினகரனும் அதிமுகவை விமர்சிப்பதில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார். இவை அத்தனையையும் இணைத்து பார்க்கும்போது அதிமுக-சசிகலா இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் வலுவாகவே காணப்பட்டன. ஆனால், முதலமைச்சர் பழனிசாமி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அனைத்திற்கும் முற்றிப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக-சசிகலா இணைப்புக்கு 100% வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்..
தமிழக அரசின் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு வருகை தரவும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுப்பதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. இருவரோடும் சுமார் இரண்டு மணி நேரம் தனித்தனியே பேசிய அவர், சசிகலா வருகை குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவாக இருவரிடமும் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பதாக பாஜகவிற்கு ஒரு எண்ணம் இருந்தால், அதனை தடுக்கவே இச்சந்திப்பு நிகழ்ந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காகவே, சசிகலா விடுதலை ஆகும் அதே நாளில், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. இது இயல்பாக நடந்த ஒன்றல்ல என்றும் திட்டமிடப்பட்ட அறிவிப்பு என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா சிறையிலிருந்து வெளிவரவுள்ள நிலையில், ஊடகங்களின் கவனம் கண்டிப்பாக அவரைப்பற்றியே இருக்கும் என்பதால், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா மூலம் அதனை குறைக்கவும், மேலும் அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு தான் தான் என்பதை காட்டவும், முதலமைச்சர் செய்த தந்திரம் என்றும் கூறப்படுகிறது.
சசிகலாவின் வருகையை பெரிதும் எதிர்பார்த்திருந்த அவரது விசுவாசிகள் மட்டுமின்றி, அதிமுகவிற்குள்ளேயே இருக்கும் அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள் உட்பட பல நிர்வாகிகளும் முதலமைச்சர் பழனிசாமியின் இந்த ’ஒரே தேதி’ அறிவிப்பை ரசிக்கவில்லை. ஆனாலும், இதையெல்லாம் வைத்து தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், அதிமுகவின் வருங்காலம் சசிகலாதான் என்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் டெல்லி பயணம்! பின்னணி என்ன?