சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு கட்சியின் பொது செயலாளராக வி.கே. சசிகலாவையும், துணை பொது செயலாளராக டிடிவி தினகரனை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தினகரன் இருவரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த தீர்மானம் பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டால் சட்டப்படி செல்லாது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சசிகலா, தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டவிரோதம்: அந்த வழக்கில் சசிகலா தரப்பிலிருந்து, "2016ஆம் ஆண்டு பொதுச்செயலாளராக நான் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சி உறுப்பினர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எனக்கு கட்டுப்பட வேண்டும். அத்துடன் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை உருவாக்கியது கட்சியின் சட்டங்களுக்கு எதிரானது" என்று குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்குகளை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "சசிகலா கட்சியில் இருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்ட நிலையில், சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று தவறாக நீதிமன்றத்தில் தெரிவிக்கிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. சசிகலா அதிமுகவிலேயே இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாகல் செய்யப்பட்டது. அதன்படி சசிகலா மனு மீதான விசாரணை மட்டும் நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
இந்த வழக்கு இன்று (ஏப். 8) நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி அமர்வில் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் நீதிபதி ஸ்ரீதேவி விடுமுறை என்பதால், தீர்ப்பு வரும் ஏப். 11 (திங்கட்கிழமை) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தைவான் நாட்டு காலணி தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு!