சென்னை: சென்னை நீதிமன்றத்தில் தனி நீதிபதி பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுக்குழு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி நேற்று (ஆகஸ்ட் 17) அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியும் கலைக்கப்பட்டுவிட்டது. அதிமுகவின் பெரும்பான்மையினர் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கட்சியின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த தீர்ப்பு கட்சி செயல்பாட்டில் மட்டுமல்லாமல் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகவுள்ளது’ என மனுவில் தெரிவித்துள்ளார்.
தனிநபர் விருப்பத்தை நீதிமன்றம் பிரசாரம் செய்கிறது: ’கட்சி ஒற்றைத்தலைமையை நோக்கி செல்லும் நிலையில் இரட்டைத்தலைமை வேண்டும் என்ற ஒரு தனிநபரின் விருப்பத்தை பிரசாரம் செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. உட்கட்சி செயல்பாடு குறித்து நீதிபதி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டது அல்ல.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளார். இது மனுவில் கேட்கப்படாத கோரிக்கைகளுக்கு நிவாரணமாக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதற்காகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
’ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 2,460 உறுப்பினர்கள் கலந்து கொண்டது, எழுத்து பூர்வமான நோட்டீஸ் அளிக்க வேண்டியது இல்லை என்ற கட்சி விதி குறித்து, பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பணியாற்ற முடியாத நிலை உள்ளது என்பன போன்ற முக்கிய விவரங்களைப் புறக்கணித்து தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, அந்த வழக்கு செல்லாததாகிவிட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். ஒற்றைத்தலைமை வேண்டும் என திடீரென முடிவெடுக்கவில்லை.
இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் ...ஒபிஎஸ்