கடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோத தங்க ஏற்றுமதி இறக்குமதி புகாரில், சென்னை பாரிமுனையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தி 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வசம் சீல் இடப்பட்டு வைக்கப்பட்டிருந்த 400 கிலோவில் 103 கிலோ தங்கம் மாயமானது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், சிபிஐ சோதனைக்கு பிறகு சுமார் 1,500 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக முறையான கணக்கு இல்லை என சுரானா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
சுரானா நிறுவனம் தங்க ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்லாமல், பவர் ப்ளாண்ட் நிறுவனமும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ஐடிபிஐ கன்சார்டியத்தில், 1,727 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 2008 முதல் 2017 வரையான நிதியாண்டில் பல மோசடி நடத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 250 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளது. இந்த மோசடிகளில் கிடைத்த பணத்தை சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக சட்டவிரோத தங்க ஏற்றுமதி இறக்குமதி, வங்கி மோசடி, ஜிஎஸ்டி மோசடியில் பெறப்பட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடுகளாகவோ, சொத்துகளாகவோ வாங்கியுள்ளார்களா எனவும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கதுறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கையூட்டுப் பெற்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர், காவலர் கைது!