சென்னை: சென்னை தீவுத்திடலில் நாளை ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஏற்பாடுகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனைக் குழுத் தலைவர் சேகர் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், '2 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை தேவஸ்தானம் சார்பில், ஏழுமலையான் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. நாளை மாலை 5 மணிக்குதொடங்கி இரவு 7 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது' எனத் தெரிவித்தார்.
நிகழ்விற்கு வரும் பொதுமக்கள் மன்றோ சிலை அருகில் தங்களது வாகனங்களை நிறுத்தவும், முக்கியஸ்தர்கள் 6-ம் எண் நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும அவர் குறிப்பிட்டார்.
பக்தர்களுக்கு லட்டு உண்டு: நிகழ்விற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது என்றும், பக்தர்களுக்கு அனுமதி மற்றும் வாகன நிறுத்தத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை என்றும் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு பொதுமக்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் வந்து செல்ல, 500 பேருந்துகள் கூடுதலாக இயக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், பக்தர்கள் குடும்பத்துடன் வந்து ஏழுமலையானின் அருளைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மூன்றாயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 அவசர மருத்துவ ஊர்திகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.