படுதோல்வி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகளும் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால் ஒரு தொகுதியில்கூட அக்கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் கடந்த சட்டப்பேரவை கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாத அவையாக மாறியது. பேரவையில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாததற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெரிதும் வருத்தப்பட்டார்.
தமிழ்நாட்டில் 4 தொகுதிகள்
இதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியைத் சந்தித்தனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றன. அதில் தமிழ்நாட்டிலிருந்து நான்கு இடங்கள் கிடைத்தன.
கை நழுவிப்போன பிரதமர் பதவி
கை நழுவிப்போன பிரதமர் பதவி1996ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், மேற்கு வங்க அப்போதைய முதலமைச்சருமான ஜோதிபாசுவிற்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிரதமர் பதவி ஏற்பதில்லை எனக் கட்சி எடுத்த முடிவால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இந்திரஜித் குப்தா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த அளவு செல்வாக்குடன் இடதுசாரிகள் வலம்வந்தனர் என்பது காலம் தந்த பரிசு.
எதிர்க்கட்சியாக இடதுசாரிகள்
1952இல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை எதிர்க்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 489 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 16. இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தது. 1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த நிலையிலும்கூட, இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தே வந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்
இதேபோல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில், இடதுசாரிகள் பெற்ற இடங்களைப் பார்ப்போம்:
1991 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டு அனுதாப அலை வீசிய நிலையிலும், இடதுசாரிகள் தலா ஒரு இடத்தைக் கைப்பற்றினர்.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆறு தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் ஐந்து தொகுதிகளையும் கைப்பற்றின.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 9 இடங்களிலும், 12 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 இடங்களிலும் வெற்றிபெற்றன.
படுதோல்வி ஏன்?
அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தபோது இடதுசாரிகளுக்குச் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் 2016ஆம் ஆண்டு பிரதான கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததால் மிகப்பெரிய தோல்வி கிடைத்தது.
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கட்சியான திமுகவுடன் இணைந்து இடதுசாரிகள் தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திமுக, அதிக இடங்களில் போட்டியிட முடிவுசெய்துள்ளதால், இடதுசாரிகளுக்கு ஒற்றை இலக்கில் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பேரவைக்குச் செல்வார்களா தோழர்கள்?
ஆனால் கடந்த காலங்களில் போட்டியிட்ட தொகுதிகள், வெற்றிபெற்ற இடங்களைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி சீட்டுகளைக் கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு இரட்டை இலக்கில் தொகுதிகள் கிடைக்குமா? சட்டப்பேரவைக்குள் மீண்டும் நுழைவார்களா தோழர்கள்? "நீதிமன்றம் சந்திக்க வேண்டிய மற்றொரு நீதிமன்றம் மக்கள் கருத்து" என கார்ல் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். ஆம் மக்கள் நீதிமன்றத்தின் முடிவை தெரிந்து கொள்ள மே 2 வரை காத்திருப்போம்.