படத்திற்கு படம் ஏதாவது ஒரு புதுமை இருக்க வேண்டும் என நினைப்பவர் நடிகர் கமல் ஹாசன். அரசியல் இயக்கத் தலைவர் கமல் ஹாசனும் அவ்வாறானவர்தான். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் நீதி மய்ய உறுப்பினர் அல்லாதவர்களும் கூட, விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என கமல் ஹாசன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் பின்பற்றாத ஒரு நடைமுறையை மநீம எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி இதே யுத்தியை செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெறமுடியாத இடங்களில், அப்பகுதியின் மதிப்புமிக்க ஒருவரை சுயேட்சையாக போட்டியிட வைத்து, அந்த வேட்பாளருக்கு இடது முன்னணி தனது ஆதரவை தந்து வெற்றிபெறச் செய்தது. இந்த யுத்தி 4 இடங்களில் அக்கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. அதுபோன்ற ஒரு தேர்தல் யுத்தியையே கமல் ஹாசனும் தமிழகத்தில் செயல்படுத்த நினைத்துள்ளார்.
மக்கள் சேவை செய்து மக்களுக்காக பாடுபடும் தனிமனிதர்கள், தங்களின் பங்களிப்பு அரசியலில் இருக்க வேண்டும் என்றாலும், அவர்களுக்கென கட்சியோ, இயக்கமோ இல்லாதபோது, அவர்களின் சேவையை பார்த்து நாங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கிறோம், இதில் தவறேதும் இல்லை என்கிறார் மக்கள் நீதி மய்ய செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ். மேலும் அவர், ”இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒரே மாதிரி ஆட்சி தான் நடக்கிறது. இது மாற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வந்தோம். எனவே, கமல் அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறையை, நாளையே அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் கூட வரலாம்" எனத் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே மக்கள் நீதி மய்யம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், முதல் முறையாக தேர்தல் களத்தை அக்கட்சி சந்தித்ததால், அதனை யாரும் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அத்தேர்தலில் 3.7% வாக்குகள் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யம் சந்திக்கப்போகும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது என்பதால், அவரின் இந்த அறிவிப்பை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. இத்தேர்தலை கமல் ஹாசனும் எளிதாக நினைத்துவிட வில்லை. மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே மாநிலம் முழுவதும் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டார் அவர்.
ஆனால், கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் கமலுடன் பேசியதாகத் தெரியவில்லை. கூட்டணி வைத்துதான் போட்டி என்றவரிடம், திமுக, அதிமுக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், யாருடன் கூட்டணி வைப்பீர்கள் என்ற கேள்விக்கு, ’நல்லவர்களுடன் கூட்டணி வைப்போம்’ என ஒரு செய்தியாளர் சந்திப்பில் கமல் ஹாசன் பதிலளித்திருந்தார். அடுத்த சில நாட்களில் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், விருப்ப ஓய்வு பெற்றதுடன், தனது மக்கள் பாதை அமைப்பு அரசியலில் இறங்கும் என்றும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், சட்டப்பஞ்சாயத்து, அறப்போர், பூவுலகின் நண்பர்கள் போன்ற சமூக நல அமைப்புகளுடனும் கமல் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அமைப்புகளில் இருந்தும் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடையே நன்மதிப்பு பெற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தும், தேர்தலில் சுயேட்சையாக நிற்க வைத்து அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளித்து வெற்றிபெற வைப்பது என்பதே கமல் ஹாசன் அறிவித்துள்ள புது யுத்தியின் நோக்கம். அதன்படி, சகாயம் ஐஏஎஸ் மற்றும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தை துவக்கிய பொன்ராஜ் ஆகிய இருவரும், தேர்தலில் போட்டியிட இருப்பது உறுதியாகியுள்ளதாக மநீம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்ய நான்காம் ஆண்டு தொடக்க விழா மாநாடு, நாளை மறுநாள் சென்னையில் நடக்க இருக்கிறது. நல்லவர்களுடனான கூட்டணியை நம்மவர் அன்று அறிவிப்பார் என மக்கள் நீதி மய்யத்தினர் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'அடிக்கிற அடியில் சனாதான கட்சி தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது' - திருமாவளவன் தாக்கு!