வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆக. 5ஆம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தலைமையில் டிஜிபி திரிபாதி, சிறப்பு செலவின பார்வையாளர்கள் முரளிதரன் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ் குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து வருமான வரி துறையினரும், அமலாக்கதுறையினரும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதால், வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது.
எனவே இம்முறை நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடா நடக்காமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சம்பந்தபட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.