மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் முதிய வாக்காளர்கள்வரை பெரும்பாலானோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ ”மக்களவைத் தேர்தலில் 71.87 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதேபோல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 75.57 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 விழுக்காடு வாக்குகளும், குறைந்தபட்சமாக பெரம்பூரில் 64.14 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன” என்றார்.
அப்போது, ரஜினி வாக்களித்தபோது அவருக்கு வலது கையில் மை வைக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் ஆணைய விதிமுறைப்படி இடது கையில்தான் மை வைக்க வேண்டும். ரஜினிக்கு வலதுகையில் மை வைத்தது எதேச்சையாக நடந்த தவறு” என்றார்.