சென்னை: மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில். காலை 9 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு தேர்தலில் 5.78 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.
நகராட்சி வார்டை பொறுத்தவரையில் 10.32 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. பேரூராட்சி வார்டுகளை பொறுத்தவரையில் 11.74 விழுக்காடு வாக்குகள் என மொத்தம் 8.21 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதிகபட்ச வாக்குப்பதிவு
மாநகராட்சியை பொறுத்தவரை சேலத்தில் அதிகபட்சமாக 12.49 விழுக்காடு வாக்குகள் காலை 9 மணி நிலவரப்படி பதிவாகியிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் மட்டும் 3.96 வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக செங்கல்பட்டில் 3.30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. 30 முதல் 40 வரையிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதுகள் உடனடியாக நீக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக 11 கோடியே 89 லட்சத்து 35 ஆயிரத்து 919 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம்
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மதுரையில் வாக்காளர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்குச் சாவடிக்குள் வரக்கூடாது என பாஜக பூத் ஏஜெண்ட் கூறியது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என கூறினார்.
நோட்டா குறித்த கேள்விக்கு, தேர்தலில் வாக்கு அளிக்காதவர்கள், படிவம் 21ஐ பயன்படுத்தி தங்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்கு அளிக்க விருப்பமில்லை என தெரிவிக்கலாம்"என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!