சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இறுதியாக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ்-க்கு சாதகமாகவே பல சம்பவங்கள் நடந்தன. முதலில் அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு தடை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, இரண்டாவதாக திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமனம் செய்ததை வங்கிகள் அங்கீகரித்தன, மூன்றாவதாக அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ் தரப்பினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வரிசையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாக மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அஇஅதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பிதழ் கடிதத்தை அனுப்பியுள்ளது.
தலைமை கழக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அஇஅதிமுக சார்பில் கழக செய்தி தொடர்பாளர் கோவை கே.செல்வராஜ் தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.