சென்னை: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை" (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தனிப்படை காவல்துறையினர் கடந்த 26.12.2021 முதல் 01.01.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
எச்சரிக்கை
அவர்களிடமிருந்து 44.71 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருட்கள், 8.5 கிலோ மாவா மற்றும் 1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் எழும்பூர் காவல் நிலைய பகுதியில் குணசேகரன் (36),ராசு(42)ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 8.2 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவொற்றியூர் காவல் நிலைய பகுதியில் அஜித்(24), என்பவரை கைது செய்து மூன்று கிலோ மாவா மற்றும் ஆட்டோ ஒன்றை பறிமுதல் செய்தனர்.
போதை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே ஒருவர் சுட்டுக்கொலை