10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே எட்டு வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்தத் திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. திட்டத்திற்குத் தடைவிதிக்கக்கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், 'சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்துசெய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எட்டு வார காலத்திற்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல்செய்யப்பட்டன.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று (டிச.08) விசாரித்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அதாவது நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாகவே, விவசாய நிலங்களை வருவாய்த்துறைக்கு மாற்றக்கூடிய தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த முனையும் தமிழ்நாடு அரசின் பணிகளுக்குத் தடை நீடிக்கிறது.
இந்த உத்தரவில் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு அறிவிக்கை வெளியிட்டது தவறு என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் வெளியிடவில்லை. அதன்படி, தமிழ்நாடு அரசு புதிய அறிவிக்கையை வெளியிடும்பட்சத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக்கூட்டங்கள், முறையான சுற்றுச்சூழல் துறையின் அனுமதிபெற்றபின், இத்திட்டத்தை தொடர்வதில், தனக்கு ஆட்சேபனை இல்லை என உச்ச நீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: மூடுபனியால் சூழப்பட்ட டெல்லி