சென்னை: தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் தமிழ்நாடு தலைமைச் செயளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இச்சூழலில், இதில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கான பாதுகாப்பு, கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள், பறிமுதல்செய்யப்பட்ட பணம், பரிசுப்பொருள்கள் நிலவரம், தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தேர்தல் பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் (உள் துறை) எஸ்.கே. பிரபாகர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் கிர்லோஸ்கர், பொதுத் துறை முதன்மைச் செயலர் செந்தில் குமார், சிறப்பு காவல் தலைமை இயக்குநர் கரன்சின்ஹா, அஞ்சனா சின்ஹா சிறப்பு தேர்தல் பார்வையாளர் அலோக் வர்தன், ஜெயந்த் முரளி (சட்டம் - ஒழுங்கு) ஏ.கே.விஸ்வநாதன், தர்மேந்திரா குமார் (ஓய்வு) ஆகியோர் பங்கேற்றனர்.