பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் கட்டணக் கழிப்பிடம், இலவசக் கழிப்பிடம் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டில், நீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சியில் இ-டாய்லெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சாலையோரங்களில் 230-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டன. மின் விசிறி, தேவைக்கேற்ப தண்ணீர், குரல் மூலம் வழிகாட்டும் ஏற்பாடு, சுகாதாரமான இடம் என நவீன வசதிகள் கொண்ட இந்தக் கழிவறைகள் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்பட்டுவந்தன.
இதில், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும், மின் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு முறையாக கொடுக்கப்படாத காரணத்தாலும் பல இடங்களில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட்கள் தற்போது உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. தொடக்க காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த இ-டாய்லெட்கள் கரோனா ஊரடங்குக்குப் பிறகு சரியான பராமரிப்பின்றி மோசமான நிலைக்கு வந்துள்ளன.
குறிப்பாக, கோடம்பாக்கம் கில் நகர் பகுதியில் உள்ள இ-டாய்லெட் பல நாள்களாகப் பராமரிப்பின்றி, குப்பைகளைக் கொட்டும் சிறு கிடங்காக மாறியுள்ளது. இந்த இ-டாய்லெட் பூங்காவுக்கு அருகில் உள்ளதால் பூங்காவுக்கு வரும் மக்கள் இந்தத் துர்நாற்றத்தால் பலவிதமான இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். பலமுறை மாநகராட்சி அலுவலர்களிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதிவாசி ஒருவரிடம் பேசியபோது, "இந்த டாய்லெட் பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் இருந்துள்ளது ஊரடங்கு முன்பு சற்று பராமரித்துவந்த இந்த இ-டாய்லெட் கரோனா ஊரடங்கிற்குப் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் இதைக்கண்டு கொள்ளவில்லை.
பலமுறை மாநகராட்சி ஊழியர்களிடம் இது குறித்து புகார் அளித்துவிட்டோம். இருப்பினும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலைப்பொழுதில் பூங்காவில் நடைபயிற்சி செய்யும்பொழுது துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது, மேலும் அங்கே பராமரிப்பு இல்லாததால் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது" எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க : அடிப்படை வசதிகள் இருந்தால் தான் இனி லே அவுட் ஒப்புதல் - தமிழ்நாடு அரசு