தூத்துக்குடி: தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் யங் இந்தியா யுனிசெப் அமைப்பின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி முகாம் மாவட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்டது.
மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பெண் குழந்தைகளுக்கு தைரியம்
அப்போது பேசிய அவர், “குழந்தைகளை அடிப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் மனதை புண்படுத்தும்படி பேசுவதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது. பெண் குழந்தைகளை தைரியமாக, சுயமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் வளர்ப்பது தான் பெற்றோரின் கடமை.
குழந்தைத் திருமணம் - விழிப்புணர்வு தேவை!
மத்திய அரசு திருமண வயது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதாகக் கூறுகிறார்கள். அதன்படி ஆண், பெண் திருமண வயது 21ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத்தை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை நாம் சமூகத்தில் உருவாக்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் முறை
குழந்தைத் தொழிலாளர்களை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதைத் தவிர, வேறு எந்த சொத்துக்களும் அவர்களுக்கு தர வேண்டியது இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தை, அனைவருக்கும் முன் உதாரணமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் தவறுக்காக தண்டிக்கபட்டால் அவர்கள் பாதை மாறிவிடும். எனவே, சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி அனைவருக்கும் அவசியமானது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற பெண்ணுக்கு உடனடி நிவாரணம் - மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் வாழ்த்து