தமிழ்நாட்டில் 47 நாள்களுக்குப் பிறகான ஊரடங்கு தளர்வில் முடி திருத்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இப்பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் வழி தெரியாமல் அவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான முடித்திருத்தகங்கள் இருக்க, சென்னையில் 30,000 கடைகள் உள்ளன.
கடை வைத்திருப்பவர், அதில் வேலை செய்பவர்கள் என தலைநகரில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். பெரும்பாலும், வாடகைக் கடையில் தொழில் செய்து வரும் இவர்கள், ஊரடங்கால் தற்பொது வறுமையின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கடன் வாங்கி குடும்பங்களை நடத்தி வரும் நிலையில், இதற்குமேல் தங்களால் வாழ முடியாது என்ற நிலைக்கு முடித் திருத்துநர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தரமணியில் சலூன் கடை நடத்தி வந்த பரணி என்பவர் வறுமையின் காரணமாக தன் கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலை தொடராமல் இருக்க சலூன் கடைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என முடி திருத்துநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முகக்கவசம், கையுறை அணிந்து பணிபுரிய தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதியளிக்கின்றனர்.
கடந்த பல நாட்களாக வீட்டிலேயே இருப்பதால், முடி பெருமளவு வளர்ந்தும், தாடியுடனும் பெருமளவு ஆண்கள் காட்சியளிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்கள் கழுத்து வரை முடி வளர்ந்து இந்த கோடைக்காலத்தில் கடும் அவதியடைந்து வருகின்றனர். பலர் தலைக்கு ’டை’ அடிக்க முடியாமல், நரைமுடியோடு வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில், சலூன் கடை மூலம் கரோனா பரவும் வாய்ப்புள்ளதாக வரும் தகவல்களால், மீண்டும் கடைகள் திறந்தாலும் மக்கள் வருவார்களா என்ற அய்யத்தில் தடுமாறி நிற்கின்றனர் முடி திருத்துநர்கள்.
இதையும் படிங்க: ’திருத்துநர்களுக்கு பயிற்சி அளித்து முடி திருத்தகங்களை திறக்கலாம்’ - சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர்