சென்னை பாடி புதுநகர் 13ஆவது தெருவைச் சேர்ந்தவர் அழகுராஜ் (27). இவர் இணையவழி உணவு விற்பனை செய்யும் நிறுவனத்தில், வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்துள்ளார்.
இன்று மதியம் வீட்டில் உணவு உண்டபின், அருகேயுள்ள மருந்தகத்தின் முன்னின்ற தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அழகுராஜை சரமாரியாக மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர்.
'சுஜித்தை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரம்' - பிரதமர் நரேந்திர மோடி
அவர்களிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சித்த அழகுராஜை ஓடஓட தலை, கழுத்து ஆகிய பகுதிகளில் வெட்டி சாய்த்துள்ளனர். இதில் மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் அழகுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெஜெ நகர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட அழகுராஜ், 2014ஆம் ஆண்டு சிவலிங்கம் என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சிறைக்குச் சென்றுவந்தவர். இதற்கு பழிதீர்க்கும் வகையில் கொலை நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகித்து உள்ளனர்.
மேலும், பாடி புதுநகரில் யார் கை ஓங்கி இருக்கிறது என்பதில் அங்குள்ள வாலிபர்களிடையே போட்டி நிலவி வந்ததுள்ளது. இதன் காரணமாகக் கொலை நடந்ததா போன்ற பல்வேறு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் ஓடஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.