தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஞாயிறுதோறும் தளா்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (ஜூலை 26) மாநிலம் முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் விஐபிகள் செல்லும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே ஒருவர் நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்துவிட்டு கீழே விழுந்துகிடந்தார். பின்னர் மீண்டும் எழுந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தை இயக்க முயன்ற அவர், நிலை தடுமாறி மறுபடியும் கீழே விழுந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால், அந்த ஆசாமியோ அதிக அளவு மது போதையில் இருந்ததால், தள்ளாடிக்கொண்டே சென்று மீண்டும் ஜிஎஸ்டி சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் சென்று படுத்துக்கொண்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்திலும், சட்ட விரோதமாக மீனம்பாக்கம் பகுதியில் மது விற்பனை என்பது படுஜோராக நடைபெற்றுவருகிறது. இத்தகைய மது விற்பனை கும்பல் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது