சென்னை: மெரினா கடற்கரையில் புகைப்படக் கலைஞர் இளமாறன் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த் என்பவரையும், 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், மெரினா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மெரினாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 4 ரோந்து வாகனங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குற்றத்தடுப்பு மற்றும் நீரில் மூழ்கும் நபர்களை காப்பாற்றுவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நீட்சியாக இன்று காலை மெரினா கடற்கரை சாலைகளிலும், சர்வீஸ் சாலைகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ட்ரோன் மூலமாகவும் மெரினா சர்வீஸ் சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பூந்தமல்லியில் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது