தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் செய்தியாளர்களிடம், "எடின்பரோ ராயல் காலேஜ் ஆப் சர்ஜன் என்ற கல்வி நிறுவனம் 1505ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரம்பரியமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எஃப்.ஆர்.சி.எஸ்., எம்.ஆர்.சி.எஸ். என்ற தேர்வுகளை நடத்தி சர்வதேச அளவிலான சான்றிதழ்களை வழங்கிவருகிறது.
மேலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நடத்தும் பட்டப் படிப்புகளை இங்கு நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர். அவர்கள் இணையதளம் மூலம் அறுவை சிகிச்சை நிபுணர்களால் நடத்தப்படும் பயிற்சிகளையும், சர்வதேச தரத்திற்கான அவர்களின் தேர்வுகளையும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டு மாணவர்கள், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன் நிறுவனத்திற்குச் சென்று படிப்பதற்கும், அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள், இங்கு வந்து படிப்பதற்கும் தேவையான கல்வி பரிமாற்றம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தால் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரம் உயரும். ராயல் கல்லூரி ஆஃப் சர்ஜன் நிறுவனத்தில் மாணவர்கள் படித்ததை நோயாளிகளுக்குச் செயல்படுத்துவது குறித்தும் தேர்வு முறையில் பின்பற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.