சென்னை: தமிழ்நாட்டு வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் கு. சிவராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் முதலமைச்சரைத் தலைவராகவும், பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களை துணைத்தலைவராகவும் கொண்டு இக்குழு, இன்று ஒன்பது புதிய உறுப்பினர்களோடு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயிப்பது, வளர்ச்சி சிறப்புத்திட்டங்களை உருவாக்குவது, அவற்றின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு பணிகளில் அரசுக்கு ஆலோசனை சொல்வது உள்ளிட்ட பல பணிகளில் இக்குழு ஈடுபடும்.
ஒரு சித்த மருத்துவரான எனக்கு கிடைத்த இந்தப் பொறுப்பினை, தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்திற்கான அங்கீகாரமாக எண்ணி மகிழ்கின்றேன். தமிழரின் பெரும் அனுபவக் கோர்வையாக அறிவியல் சாரமாக இருக்கும் சித்த மருத்துவத்தை, நம் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களில் இருந்து, உலகெங்கும் உள்ள மக்களுக்கு, அதன் தொன்மமும் மரபும் சிதையாது, அறிவியல் தரவுகளுடன் எடுத்துச் செல்வது என் பணியாக இருக்கும்.
சூழலுக்கு இசைவான, மரபு வேளாண் உத்திகளை, முழுவீச்சில் நம் தமிழ் நாட்டில் கொணர்வதற்குமான பணிகளை முடுக்கிவிடுவதும், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்மாதிரி மாநிலமாக மாற்றப் பணி செய்வதும் முக்கிய நோக்கங்களாய் இருக்கும்.
விசாலமான பார்வையில், நம்முன் பல இலக்குகள் உள்ளன. தமிழ் நாட்டின் நலம் நோக்கும் பல ஆளுமைகள் உலகெங்கும் உள்ளனர். எல்லோரும் கைகோர்த்து, மக்கள் நலம் சார்ந்த பல சிறந்த நகர்வுகளுக்கு முன்னெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு
கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி மாநில திட்டக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். இக்குழுவானது முதலமைச்சர் தலைமையின் கீழ் ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சி செயல்பாடுகளுக்கான பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டில் 'மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு'வாக மறுசீரமைக்கப்பட்டது.
திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழுவை திருத்தியமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூன் 6) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.