மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2015ஆம் ஆண்டு அறிக்கையில், 95.5% சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களாலேயே நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் பெண்களுக்கு அவர்களது வீடுதான் அபாயகரமானதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் திருமணத்திற்குப் பிறகு கணவன், மற்றும் அவருடைய உறவினர்களால் துன்புறுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 984 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் பெண்கள் மீதான வன்முறை இதைவிட இருமடங்கு உயர வாய்ப்புள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அச்சம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியத் தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை இயங்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் பணிக்கு செல்லும் ஆண்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலானோர் பணிச்சுமை பெருகி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சாதாரண நாட்களில் குடும்பப் பெண்கள் விடியற்காலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, சமையலை முடித்துவிட்டு கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு அனுப்பியவுடன் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள வாய்ப்புகள் இருந்தன. இதனால் வீட்டுப் பணிச்சுமையும் சற்று குறைவாக இருக்கும். ஆனால் தற்போது பெரியவர்கள், கணவன், குழந்தைகள் என எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால் உணவு சமைப்பது, துணித் துவைப்பது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது என குடும்பப் பெண்களுக்கு பணிச்சுமைப் பெருகி பெரும்பாலான பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டு, பெரும்பாலான ஆண்கள் மது கிடைக்காத விரக்தியில் வீட்டிலிருக்கும் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பெண்கள் மீதான வன்முறை வீட்டுக்குள் நடப்பதால், வெளியில் சொல்ல முடியாமல் பெண்கள் மிகுந்த மன இறுக்கத்தில் உள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 25 புகார்கள், பெண்கள் மீது நடக்கும் வன்முறை தொடர்பானவையாக இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கடந்த 2 நாட்களில் மட்டும் பெண்கள் மீது வன்முறை நடத்திய 6 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண்கள் மீதான வன்முறை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வந்து வேலை பார்க்கக்கூடிய பெண்கள், தற்போது ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சமூக நலக்கூடம் போன்றவைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்க வரும் நபர்கள் அல்லது அங்கு பணிபுரியும் நபர்களினால் ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா அல்லது பாலியல் ரீதியான தொல்லை ஏதும் உள்ளதா என பெண் காவலர்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் வன்முறை தொடர்பான புகாரளிக்க ’ 181, 1091, 100 , 102’ ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்களது வீதியிலோ அல்லது அருகில் வசிக்கும் வீடுகளிலோ பெண்கள் மீது ஏதேனும் வன்முறை நடந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். புகார் தருபவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் கைது!