இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, 2013ஆம் ஆண்டு முதல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு 2013 முதல் தமிழ்நாடு அரசு ரூ. 2800 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த நிதிநிலை அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வருகிறது. அரசே ஏற்ற பிறகும், அந்த கல்லூரியின் கல்விக் கட்டணமும், பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமும் முன்பு இருந்தபடியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவக் கல்விக்கு ரூ. 5.44 லட்சம் என்றும், முதுநிலை மருத்துவக் கல்விக்கு ரூ. 9.6 லட்சம் வரையிலும், இளநிலை பல் மருத்துவப் படிப்புக்கு ரூ. 3.5 லட்சமும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ரூ. 7.8 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கட்டணங்களை விட மிக அதிகமாகும்.
அதேபோல் பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரியையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்போது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது. அந்த கல்லூரிக்கான கட்டணம் ரூ. 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் பெற்றோர் சிரமப்படுகின்றனர்.
எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை கல்விக் கட்டணம் ரூ. 13,670 ஆகவும், முதுநிலை மருத்துவக் கல்விக் கட்டணம் ரூ. 27,500 ஆகவும் உள்ள நிலையில், மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு (ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி), அரசு பல் மருத்துவக் கல்லூரியின் கட்டணமாக 11,610 ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்க வேண்டும்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10.01.2020 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.