இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் கரோனாவுக்கு எதிரான போரில் அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாட்டின் இந்திய மருத்துவ சங்கம் ஆதரவு அளித்துவருகிறது.
மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த பொழுது அவரது உடல் நல்லடக்கம் செய்ய விடாமல் சிலர் தடைசெய்தனர். அப்பொழுது முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். அந்நேரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சில கோரிக்கைகளை வைத்தது.
முதலமைச்சர் முன்னதாக அறிவித்தபடி அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா சிகிச்சை அளிக்கும்போது இறக்க நேரிட்டால் இழப்பீட்டு தொகையை 10 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். இறந்த மருத்துவர்கள் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
கரோனா பணியில் இறந்த தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து சிலமணி நேரத்திற்குள் முதலமைச்சர் அறிவித்தது மருத்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் தொய்வின்றி தொடர்ந்து பணி செய்திட தூண்டுகோலாக அமைந்தது.
ஆனால், இந்த அறிவிப்புகள் தகுந்த அரசாணை வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
ஆகவே அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றிடவும், அவர்கள் மனதிலும், அவர்தம் குடும்பத்தார் மனதிலும் அரசு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசாணையாக வெளியிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.