செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் ரங்கநாதன் என்ற இளைஞர், கெட் ருபீ டாட் காம் என்ற ஆன்லைன் லோன் செயலி மூலம் ரூ. 4000 ஆயிரம் கடனாக பெற்றார். குறிப்பிட்ட நேரத்தில் கடனை செலுத்த முடியாததால், விவேக் ரங்க நாதன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அவரது நண்பர்களுக்கு அந்த செயலியின் நிர்வாகம் குறுந்தகவல் அனுப்பியது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், கிணற்றில் விழுந்து விவேக் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், ஆன்லைன் லோன் செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 60 லோன் ஆன்லைன் செயலியும் ரிசர்வ் வங்கியால் பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலியாகும். அவற்றை உபயோகிக்கும் நபர்களது தகவல்களை திருடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அங்கீகரிக்கப்படாத செயலியை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், இது போன்ற செயலிகளில் பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் திருடப்படும் எனவும், லோன் பெற்ற பிறகு அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இது போன்ற செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்தும் போது அதன் உண்மை தன்மை குறித்து ரிசர்வ் வங்கியின் வலைதளத்தில் சரிப்பார்க்க வேண்டுமென காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.