தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை லயோலா கல்லூரி வாயிலில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கல்லூரி மாணவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மத்திய அரசின் அடிமை அரசான அதிமுக அரசு ஆதரித்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பாக, ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற வேண்டும் என்று நிர்ணயம் செய்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம். அதன்படி இன்று, நான் படித்த கல்லூரியில் மாணவர்கள் தானாக முன்வந்து இச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர் ” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, குடியுரிமை சட்டம் பற்றி ரஜினிகாந்த் கூறியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ரஜினிகாந்த் ஒரு நடிகர், அவர் முதலில் அரசியல் கட்சி தொடங்கி, தனது கொள்கைகளைக் கூறிய பின்புதான் இதற்கு பதில் அளிப்பேன். மாணவர்கள் யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கவில்லை என்று கூறிய அவர், ரஜினிகாந்த் நடிகர் என்பதால் அவருக்கு அரசியல் சரியாக புரியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்