மூத்த அரசியல் தலைவர், மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா திமுக சார்பாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாவலர் நெடுஞ்செழியன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, எம்.பி தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நமது திமுகவை நிறுவிய பேரறிஞர் அண்ணாவுக்கு வழங்கிய அரிய படைக்கலன்களில் ஒருவராக நாவலர் திகழ்ந்தார். இனமான பேராசிரியரும், கே.ஏ. மதியழகனும் அதே பல்கலைக்கழகம் வழங்கிய படைக்கலன்கள் என தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது. அதன்மூலம், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அதே காலக்கட்டத்தில்தான், பள்ளி மாணவராக கையில் தமிழ்க்கொடி ஏந்தி இந்திக்கு எதிராக முழங்கி வந்த கருணாநிதி, திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை தொடங்கி நடத்தி வந்தார். அதன் ஆண்டு விழாவில், கருணாநிதியின் அன்பான அழைப்பின் பேரில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தவர் நாவலர் நெடுஞ்செழியன்.
மாணவ பருவத்திலிருந்தே இருவரும் திராவிடக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டனர். அதன்பின், திராவிட இயக்கத்தின் அரசியல் களத்தை அவர்களும் அவர்களைப் போன்றோரும் பேரறிஞர் அண்ணாவின் தலைமையின் கீழ் வடிவமைத்தனர். தலைவர் கருணாநிதி வளர்த்துக் காத்த அரசியல் நாகரிகமும், திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தகுதிமிக்கதோர் இடமும் கொண்ட நாவலரின் நூற்றாண்டு விழாவை திராவிட முன்னேற்றக் கழகம், வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும், சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது" என்று தெரிவித்துள்ளார்.