சென்னையில் இன்று காலமான முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி. சாமியின் உடலுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்களும் சாமியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ”திமுகவின் சுறுசுறுப்புமிக்க தொண்டராகவும், கழக வளர்ச்சிப் பணிகளில் கள வீரராகவும் செயல்பட்ட கே.பி.பி. சாமி, மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றிய காலங்களில், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில் அவர்களின் பிரச்னைகளுக்காகக் கருணாநிதியிடமும், என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும் மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் இருந்தவர்.
இடையில் உடல் நலம் குன்றியிருந்த அவரை நேரில் சந்தித்தபோதுகூட, மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்னிடம் பேசினார். அந்தளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காவும் இரவு பகலாகப் பணியாற்றிய ஒரு செயல் வீரரை இந்த மக்கள் இன்று இழந்து வாடுகிறார்கள் “ என்று கூறினார்.
இதையும் படிங்க: 'அவன் நல்லவனோ, கெட்டவனோ... என் மகன ஜெயிக்க வச்சான்... பதவி கிடைக்க தளபதிட்ட சொல்லிருக்கேன்' - சர்ச்சையில் துரைமுருகன்