திமுக தலைவராக ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் வெற்றி பெற்றதின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தலைமை மேல் வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மாபெரும் இரு தலைவர்களின் மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் மக்கள் செல்வாக்கை பெற முயற்சித்து வந்தனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்தது. மற்ற கட்சிகளை விமர்சித்தாலும், அவர்களின் விமர்சனம் திமுக வாக்குகளை பெரிய அளவு பிரிக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தேர்தல் முடிவுகள் மூலம் திமுக வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் திமுக பெரிய சறுக்கலை சந்தித்தது. அந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 23.91 விழுக்காடாக சரிந்தது. பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 31.64 விழுக்காடு வாக்குகள் பெற்றது. இதன் பின் தமிழ்நாடு அரசியலில் பெரிய அளவு மாற்றங்கள் நிகழ்ந்தன.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் பாஜக ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழ்நாட்டில் திமுக பெரிய வெற்றி பெற்றுள்ளது. திமுக இந்த தேர்தலில் 32.76 விழுக்காடு வாக்குகள் பெற்று தனது வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்று நிரூபித்துள்ளது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அக்கட்சியை வழி நடத்தியபோது பெற்ற அதே வாக்குகளை தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் பெற்றுள்ளார். இதன் மூலம் மக்கள் மனதில் திமுக தலைவர் ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.