சென்னை: நாட்டு மக்களை பாஜக அரசு மோசமாக நடத்துவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி, “உத்தர பிரதேச மாநிலத்தில் மோசமாக நடைபெற்றுள்ள வன்முறையை மூடிமறைக்க தான் அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. குடும்பத்தினரை நெருங்க விடாமல், வீட்டில் வைத்து பூட்டி இறுதி சடங்கை காவல் துறையினரே நடத்தியுள்ளனர்.
இதை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளார். அங்கு செல்லும் அரசியல் தலைவர்களையும், மக்களை தாக்குவதிலும், தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் பாஜக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட திருணாமூல் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருக்கிறார். மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார். மூடி மறைப்பதற்கான முயற்சியில் தான் அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது” என்றார்.
இந்தி திணிப்பு குறித்து அவர் பேசுகையில், “மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ளாமல் புரியாத மொழியை மக்களிடம் திணிப்பதை பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. கடிதங்களுக்கு கூட இந்தியில் பதில் வருகிறது. ரயில்வே பயணச்சீட்டு பதிவு செய்யும்போது, இந்தியில் வருவதால் சாதாரண மக்களால் படிக்க முடிவதில்லை. குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல், இந்தி திணிப்பை மும்மரமாக செய்து வருகிறார்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.
மேலும், கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுகவினர் மீது தொற்று நோய் பரவல் விதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, “இப்பொழுதுதான் கரோனா தமிழ்நாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். எங்கள் வழியாக அதையாவது கண்டுபிடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்தார்.