தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், பேரறிவாளன் விவகாரத்தில் மெத்தனமாக இருக்கிறீர்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று கூறினார்.
மேலும், 'பேரறிவாளனின் கருணை மனு உங்களிடம் (திமுக) வரும்போது நளினி தவிர மீதி இருப்பவரைத் தூக்கிலிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நீங்கள்தான்' என்றும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதற்குத் துரைமுருகன், 'ஆளுநரை தமிழ்நாடு அரசு வலியுறுத்தலாம்' என உச்ச நீதிமன்றம் கூறியதைச் சுட்டிக்காட்டி, அதன்படி யார் மூலமாகப் பேசினாலும் சரி என தனது கருத்தை முன்வைத்தார்.