இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்று கிராமப்புற பரவலாக மாறி, மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு, நான்கு மாதத்திற்கும் மேலாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பொறுப்புள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், மருத்துவ, பொருளாதார, தொழில்துறை வல்லுநர்களைக் காணொலிக் காட்சி மூலம் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.
அதில், உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை, தொலைநோக்காக நிறைவேற்ற வேண்டியவை என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசேர்ப்பது எனது கடமை என்ற அடிப்படையில் இங்கு முன்வைக்கிறேன்.
உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆலோசனைகள்:
1) ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினைச் சமாளிப்பதற்கு, அனைவருடைய கையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் வாங்கும் திறனை உயர்த்த வேண்டும்.
2) ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அளித்த ஆயிரம் ரூபாய் போதாது என்பதால், குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயாவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாகப் பணமாக வழங்கப்பட வேண்டும்.
3) ஊரடங்கு காலத்தில் உற்பத்தியாகும் பொருள்களும், மக்களும் ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்வதை முறைப்படுத்தலாம். ஆனால் அறவே தடை செய்யக் கூடாது.
4) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
5) கிராம மக்களின் வருமானத்தை வலுப்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வருடத்திற்கு 250 நாள்களாக உயர்த்திட வேண்டும்.
6) அரசாங்கம் அதன் மூலதனச் செலவினங்களைச் சுகாதாரத் துறையிலும், தேவையான பிற தேவைகளிலும் அதிகரிக்க வேண்டும்.
7) ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும். கரோனா நெருக்கடி தீரும் வரையிலாவது மாநிலங்கள் தங்களை ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.
தொலைநோக்கு பரிந்துரைகள்:
1) தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்புத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
2) தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அரசு இலவச மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்கும்.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீண்டு இயல்பு நிலை திரும்புவதற்கும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட ஆலோசனைகளில் கவனம் செலுத்தி, கரோனாவின் பேரழிவிலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.