இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது;
"தமிழ்நாட்டில் நகரத்தார் அதிகம் வாழும் தேவகோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டை வரை சென்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய, முன்னாள் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரித்திரப் புகழ் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சாதனையாளர். பதினெட்டாவது இந்தியச் சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தவர், மூன்றாண்டு பதவிக் காலத்தில் 33 'சட்டக் கமிஷன் அறிக்கைகளை' மத்திய அரசுக்கு அளித்த ஒரே ஆணையத் தலைவர் என்ற சாதனையை, ஆணைய வரலாற்றில் உருவாக்கியவர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர பாடுபட்ட அவர், பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கும் இந்து வாரிசுரிமைச் சட்டத்திலும், இந்திய வாரிசுரிமைச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பரிந்துரைகள் செய்தவர்.
ஒரே நேரத்தில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள அவரது புதல்வர், மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சுந்தரேசன், குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.