சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசு எடுத்துவரும் சீரிய நடவடிக்கைகளால் நோய்த் தொற்றின் தாக்கம் சென்னையில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தண்டையார்பேட்டை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதால், நல்ல பலன் கிடைத்துவருகிறது. கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு அரசு 10 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. அரசின் சக்திக்கு மீறி இந்தச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதால் அரசின் வருவாய் குறைந்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பினைத் தடுக்க உயர் அலுவலர்கள் கொண்ட குழுவினை அமைத்து நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுவருகிறது. மேலும் அந்த மாவட்ட அமைச்சர்களும் பொறுப்பேற்று, விரைவாக தொற்று பாதிப்பினைக் கட்டுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் குறித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தைக் குறை சொல்வதை தனது ஒரே பணியாக வைத்துள்ள ஸ்டாலின், தனது கட்சிக்குள் உள்ள குறைகளையும் கொஞ்சம் பார்க்க வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அவருடைய பணிகளைச் செய்வாரா என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.