நாளை 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ”தமிழ்நாட்டிற்கான நிதி வருவாய் குறைந்துள்ளது என தணிக்கைக் குழு அறிக்கை கூறுகிறது. அன்றாடச் செலவையே கடன் வாங்கித்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் தமிழகம் எவ்வாறு மேலாண்மையில் முதலிடம் வகிக்கும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்த தனி நபர் மீதான கடன் 35,000 ரூபாயிலிருந்து, தற்போது 45,000 ரூபாயாக உள்ளது. இது என்ன மாதிரியான நிதி மேலாண்மை என்று தெரியவில்லை.
மக்களுக்கு இலவசத் திட்டங்களை அவர்களிடம் இருந்து வாங்கும் பணம் மூலம் அரசு செய்துவருகிறது. இன்றைய இலவசத் திட்டங்களுக்கு நம் பிள்ளைகள் வட்டிக் கட்ட வேண்டும் என்ற நிலையில்தான் நாம் உள்ளோம்.
ஒருக் கட்சி, ஆலோசகரை வைத்துக் கொள்வதில் தவறில்லை. அதேபோல் ஆலோசகர் என்பதால் அவர் தான் கட்சியையே இயக்குகிறார் என்று கூறுவதும் தவறு. இதுபோன்ற விவகாரத்தில் தேவையில்லாமல் அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், அரசியல் கருத்துச் சொல்வது வேதனை அளிக்கிறது. அவர்கள் வேலையை அவர்கள் சரியாக செய்ய வேண்டும். நிதித்துறைச் செயலாளராக பத்து ஆண்டுகள் சண்முகம் இருந்தபோது என்ன செய்தார் என்று தெரியவில்லை. இன்றிருக்கும் நிதி நிலைமையைப் பார்த்தால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று தான் தெரிகின்றது” என சாடினார்.
இதையும் படிங்க: மாற்றுத் திறனாளிகள் நலப்பணிகள் - அமைச்சர் சரோஜா உறுதி!