சென்னை: பாரதியார் நூற்றாண்டு நினைவு தினமும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் 64ஆம் ஆண்டு நினைவு தினமுமான இன்று (செப்.11), காலை சின்னப் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர் வணக்கம் நடத்தப்பட்டது.
இதில் இருவரின் உருவப் படங்களுக்கும் மலர்த்தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ”கொட நாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்த விசாரணையின் முடிவில் தான் யார் குற்றவாளி என்று தெரியவரும்.
வன்புணர்வு செய்பவர்களுக்கு மரண தண்டனை
ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஏதாவது பங்கு உள்ளதா? ஒரு சம்பந்தமும் இல்லை. பணம் கொடுத்தால் சாதி ஒழிந்துடுமா? சாதி, பெண்களை வன்புணர்வு, கொலை செய்பவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அது எங்களின் கோட்பாடு.
தலைவி படம் நான் பார்க்கவில்லை. காவல் துறையினருக்கு 8 மணி நேர பணி என்ற விவகாரத்தில் நீதிமன்றமும் நாம் சொல்வதைக் கேட்கிறது. இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
’ஆளுநர் அவரது பணியை பார்க்க வேண்டும்’
உளவு பார்ப்பதுதான் ஆளுநரின் வேலை. தற்போது வரக்கூடிய அவர், உளவுத்துறையில் இருந்து வருவதால் ஆய்வு என்று ஏதும் நாடகம் நடத்தாமல் அவரது பணியை பார்க்க வேண்டும்.
’வடிவேலு பிரச்னையை தீர்த்து வைத்தேன்’
நடிகர் வடிவேலு பிரச்னையைத் தீர்த்து வைத்தது நான் தான். விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் வடிவேலு போன்று இன்னொரு கலைஞர் இனிமேல் பிறந்துதான் வரவேண்டும்” என்றார்.
தொடர்ந்து, இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனித் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தற்போது தமிழர் நலன்குறித்து நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
திமுகவை நாம் தமிழர் வழிநடத்திச் செல்கிறது
நான் இதற்காக உண்மையிலேயே மகிழ்கிறேன். தமிழ் தேசிய அரசியல் வெல்கிறது. திமுகவை நாம் தமிழர் கட்சி தான் வழிநடத்திச் செல்கிறது எனும் பெருமை, திமிர் எனக்கு உள்ளது. எங்களைப் பின்பற்றி தான் அனைத்தும் நடக்கிறது. எங்களுக்கு பேசுவதற்கு எதையும் மிச்சம் வைக்காமல் திமுக அறிவிப்பு வெளியிடுகிறது. இதில் எங்களுக்கு பெருமைதான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பனராஸ் பல்கலையில் பாரதி பெயரில் ஆய்வு இருக்கை- பிரதமர் அறிவிப்பு