சென்னை: திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவின் உண்ணா நிலை போராட்டம் நாளை காலை 8 மணிக்கு திட்டமிட்டபடி நடைபெறும். உண்ணாவிரதத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. ஊடகங்களில்தான் தகவல்கள் வருகின்றன என்றார்.
அதிமுக பலவீனமான கட்சியா?
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எத்தனையோ தகவல்கள் வருகின்றன அது போன்று இதுவும் ஒரு தகவல் என்றார். திமுக பலவீனமானதால்தான் கமலுடன் கூட்டணி பேசுகின்றனர் என்கிற அமைச்சர் ஜெய்குமாரின் கருத்து குறித்த கேள்விக்கு, அதிமுக பலவீனமானதால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறார்களா என்ன? என்றார்.
திமுக மட்டுமே நம்பத்தகுந்த கட்சி
நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரை ரத்து செய்திருப்பது குறித்த கேள்விக்கு, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள முடியாத அச்சத்தின் காரணமாகவே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் தற்போது திமுக மட்டுமே மக்கள் மத்தியில் நம்பத்தகுந்த கட்சியாக உள்ளது.
மக்களை ஏமாற்றும் பாஜக
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து பதிலளித்த அவர், இந்த அரசாங்கம் மிகப்பெரிய பொய்யை பரப்புரை செய்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்துள்ள நிலையில் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி இருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
அத்தைக்கு மீசை முளைத்தால்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கமலுடன் கூட்டணி அமைக்குமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரு வேளை அத்தைக்கு மீசை முளைத்தால் நாங்கள் சித்தப்பா என்று அழைக்கிறோம் என தெரிவித்தார்
இதையும் படிங்க : பெரியண்ணன் போல் செயல்படும் மத்திய அரசு - திமுக விமர்சனம்!