சென்னை: கோயம்பேட்டில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் திமுக திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தலைவர் சரவணன் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். மேலும் தேர்தலுக்காக 'தாமரை மலரட்டும்! தமிழகம் வளரட்டும்!' என்ற பதாகைகள் அடங்கிய வாகன பரப்புரையையும் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பிரபலங்கள் அதிகளவில் பாஜகவில் இணைவது எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. திமுக தேர்தல் அறிக்கை பொய்யும் புரட்டுமாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள ஏழு கோரிக்கைகளும் ஏற்கனவே நரேந்திர மோடி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் அறிக்கையில் ஒன்றை கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பின் அதை செய்யாமல் கொள்ளையடிப்பதை மட்டுமே செய்துவருகிறது திமுக. கொள்ளை அடிப்பது, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு செய்வதில்தான் திமுக கவனம் செலுத்துகின்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அதிகரிக்கும், ஊழல் தலைவிரித்தாடும், கொள்ளை அடிப்பார்கள் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விவசாயிகளுக்கு நிலம் கொடுக்கிறேன் எனக் கூறி இருந்த நிலத்தையும் பிடிங்கிவிட்டனர். திமுக அறிக்கையில் சொன்னதை மறந்து விட்டு கொள்ளையடிப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுக்கும். 2500 ரூபாய் தந்த அதிமுக அரசிற்கு 1500 ரூபாய் தர முடியாதா..? 8 கோடி பேருக்கு இலவசமாக கேஸ் இணைப்பை மோடி அரசு தான் தந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் 115 இடங்களில் பாஜக போட்டி: கூட்டணிக்கு 25 இடங்கள்