கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அதிமுகவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதி, “அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க மாட்டார்கள். அதனையும் மீறி அங்கு இன்று ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலின் பேரில் பூங்கொடி என்ற அதிமுகவை சேர்ந்த பெண், ஸ்டாலினிடம் வீண் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அந்த பெண்ணை போலீசார் அப்புறப்படுத்தியதும், உடனே அவர் அமைச்சர் வேலுமணியுடன் செல்ஃபோனில் பேசினார். மேலும் கோவை டி.எஸ்.பி சுந்தர்ராஜன், பூங்கொடியிடம் உடனே புகார் அளிக்க கூறியுள்ளார். இது குறித்த வீடியோ ஆதாரங்களை டிஜிபியிடம் சமர்பித்துள்ளோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் கோவைக்கு சென்று பரப்புரை மேற்கொள்வதை தடுக்கவே, அதிமுகவினர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரே இதற்கு துணை போவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால், இதனை தடுக்கக்கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். இல்லையென்றால் நாளை முதல் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் அவரை மறித்து கேள்வி எழுப்புவோம்” என்றார்.
இதையும் படிங்க: நான் தயார், ஸ்டாலின் தயாரா? - வேலுமணி பதிலடி