தேனி மாவட்டம் க.விலக்கு அரசு மருத்துக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, மருத்துவக்கல்லூரி மருத்துவருக்கு இமெயில் மூலமாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவரின் மகன் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததும், தேர்விற்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும் மாணவனின் படமும் வெவ்வேறாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். இந்த சூழலில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த நீட் தேர்விலும் முறைகேடு நடந்தது குறித்து பல சமூக ஆர்வலர்களும் கடும் விமர்சனங்களை முன் நிறுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், தனியார் செய்தி தொலைக்காட்சியில் வெளியான இதுதொடர்பான செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் அனிதா போன்ற மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான நீட் தேர்வு, உதித் சூரியா போன்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் இந்த தேர்வை இனியும் அனுமதிப்பதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அடிமை அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.