இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு நடத்தும் வகையில், கரோனா சோதனை செய்யும் அதிவிரைவு பரிசோதனை கருவிகளை (Rapid Test Kit) அதிக விலைக்கு வாங்கியுள்ள அதிமுக அரசின் முகமூடியைக் கிழித்தெறியும் வகையில், “இனிமேல் கரோனா நோய் பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் 600 ரூபாய்க்குப் பதிலாக ஜிஎஸ்டி உட்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள மனித நேயமிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்.
’ சீன நிறுவனம் இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை 225 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. அதை இறக்குமதி செய்ய ஆகும் சரக்கு கட்டணம் 20 ரூபாய். ஆக மொத்தம் ஒரு கருவியின் விலை 245 ரூபாய் ‘ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்தால், 245 ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவிக்கு, அதிமுக அரசு 600 ரூபாய் கொடுத்திருக்கிறது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.
ஐ.சி.எம்.ஆர். அங்கீகரித்த நிறுவனத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவி கொள்முதல் ஆர்டரைக் கொடுக்க ஏன் அதிமுக அரசு முன்வரவில்லை? அரசுப் பணத்தில் தன்னை தினந்தோறும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, ஐ.சி.எம்.ஆர். அங்கீகாரம் பெறாத ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கருவி கொள்முதல் ஆர்டர் வழங்க எப்படி அனுமதித்தார்?
50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவி கொள்முதலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் என்ன என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
இதுதவிர, அதிமுக அரசால் வாங்கப்பட்ட இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளின் தரம், இதனைக்கொண்டு எடுத்த பரிசோதனை முடிவுகள் துல்லியமானதா என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்கிட வேண்டும்.
இந்த நேரத்தில் இப்படி இக்கட்டான கேள்விகளைக் கேட்கலாமா, இது அரசியல் என்று எளிமையாகச் சொல்லி, கேள்விக் கணைகளைக் கடந்துபோக முயற்சி செய்யக் கூடாது. இது, மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தைக் கரையான் அரிக்கும் காரியம் போன்றது " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஒன்றிணைவோம் வா' திட்டம் குறித்து கான்பரன்சிங்கில் உரையாடிய ஸ்டாலின்