தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களின் ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்காக வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவது, தலையில் மொட்டையடிப்பது போன்றவற்றை செய்வது வழக்கமான ஒன்றுதான். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லை என்று கூறியவாறு தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கட்சிகளின் மேல் தீராத பற்றுக்கொண்ட தொண்டர்கள் சிலர் அவ்வப்போது எதையாவது வித்தியாசமாக செய்வார்கள். அந்தவகையில், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் ஈர்ப்புக் கொண்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்த காசமுத்து.
இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய இருசக்கர வாகனத்திலேதான் செல்வார். திருநெல்வேலியில் எந்த இடத்தில் திமுகவின் மாநாடோ, கூட்டமோ நடந்தால் தன்னுடைய வண்டியிலேயே சென்று அக்கூட்டங்களில் கலந்துகொள்வார். இதோடு நில்லாமல், தேர்தல் சமயங்களில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பரப்புரையிலும் ஈடுபடுவார்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி ஏழாம் தேதி மறைந்ததின் நினைவாக காசமுத்து, ஒவ்வொரு மாதத்தின் ஏழாம் தேதியும் மொட்டையடித்துக் கொள்வார். இதனையறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் காசமுத்துவை அறிவாலயத்துக்கு அழைத்து இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது காசமுத்துவின் குடும்பத்தாரும் உடனிருந்தனர்.