அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு உள்ளிட்ட மூவரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் சார்ந்த கட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் மூன்று பேரும் கலந்துகொண்டு வந்ததாகவும் கூறி புகைப்படங்களை இணைத்து அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அவர்கள் மூன்று பேரும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவைச் செயலர் சீனிவாசனிடம் திமுக மனு அளித்துள்ளது.
இந்நிலையில் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது. இதில், ‘சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள மூன்று அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கினை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.