மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் இருப்பதால் 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனையடுத்து மக்களவைத் தேர்தலுடன் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மக்களவைத் தேர்தலுடன் மீதம் இருக்கும் நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், நான்கு தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம்.சி. சண்முகையாவும், சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.