டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய மா.சுப்ரமணியன், " ஐ.நா அவை முதல் கனடா பிரதமர் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஆனால் விவசாயி என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். மேலும் அவரோடு கூட்டணியில் உள்ள அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோரும் இது குறித்து வாயே திறக்கவில்லை ” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாண தாமதப்படுத்தினால் நாங்களே களத்தில் இறங்க நேரிடும் என்றும், போராட்டங்கள் தீவிரமடைந்து சட்டப்பேரவையையே குலுங்க வைக்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
8 வழிச்சலை திட்டமே தேவையில்லை என்பதுதான் அனைவரின் கோரிக்கை என்ற பாலகிருஷ்ணன், சாலைக்காக அல்ல, அதன் பெயரில் கமிஷன் வாங்குவதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். ரஜினி உட்பட யாரெல்லாம் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவில்லையோ, அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதே போல் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பிலும் சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!