சென்னை: சொத்து வரி மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,
"மக்கள் பிரச்னைகளில் உள்ளபோது, சொத்து வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கரோனாவில் இருந்து மீண்டும் தற்போதுதான் சகஜ நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். எனவே ஒரு ஆண்டு வரி உயர்வை ஒத்திவைக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குச்செல்லும்போது பாதுகாப்பு இல்லாததால், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். படகுகளை ஏலம் விடுகின்றனர். தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்த தருணத்தைப் பயன்படுத்தி, கச்சத்தீவை மீட்க வேண்டும். அப்போதுதான் மீனவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும்.
தேர்தல் நேரத்தில் பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிய திமுக, அதனை நிறைவேற்றாமல் வரியை மட்டும் உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு மட்டும் பதவியில் உரிமை உள்ளது. அவர்களது கணவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வரிகளைக் குறைக்காவிட்டால் கட்டாயம் மிகப் பெரிய போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'CUET' நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை